சீமானுக்கு சிறை அதிகாரிகளால் மேலும் நெருக்கடி! நூலகம் செல்லவும் தடை!!
கடந்த 3 வாரங்களுக்கு மேலாக தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நாம் தமிழர் அமைப்பின் தலைவர் சீமானை, பெரியார் திராவிடர் கழக தலைவர் கொளத்தூர் மணி, சசிகலாவின் கணவர் நடராஜன் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
நேற்றுக் காலை இவர்கள் இருவர் மற்றும் நாம் தமிழர் அமைப்பைச் சேர்ந்த திருச்சி வேலுச்சாமி ஆகியோர் வேலூர் சிறைக்குச் சென்றனர். அங்கு சீமானை சந்தித்து முக்கால் மணி நேரம் ஆலோசனை நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் குறித்து இவர்கள் கருத்து தெரிவிக்கவில்லை. இருப்பினும் தேர்தல் நெருங்கும் சமயம் என்பதால் அரசு தன்னை வேண்டும் என்றே தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து உள்ளதாக சீமான் கூறியதாக தெரிகிறது.
எனினும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சீமானுக்கு சிறை அதிகாரிகள் மேலும் நெருக்கடிகள் கொடுத்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், சிறைச்சாலைக்குள் நடைப்பயிற்சி செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக குமுதம் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து அவர் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. இந்நிலையில், சிறையில் உள்ள நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் வாசிப்பதற்கு சிறை அதிகாரிகள் அனுமதி மறுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று அதே சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், பேரறிவாளன் உள்ளிட்டோரை அடிக்கடி சந்தித்து நீண்ட நேரம் பேசி வந்தார். இந்நிலையில் சிறையில் யாருடனும் அதிகநேரம் பேசக்கூடாது என்று சீமானுக்கு புதிய நெருக்கடி கொடுக்கப்பட்டு வருவதாகவும் குமுதம் செய்திகள் தெரிவிக்கின்றன